இரண்டாம் இந்திரா!

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on
உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் 23 ஜனவரி 2019 அன்று அதிகாலை தில்லியிலிருந்து 4 மணி விமானத்தைப் பிடித்து லக்னோ சென்று கிழக்கு உ.பி தலைவர்களுடன் தேர்தல் வியூகங்களைப் பற்றி விவாதித்துவிட்டு மறு நாள் காலை தில்லிக்குத் திரும்புவதாக திட்டமிட்டுக் கிளம்பியிருந்தார்.

அன்று மாலை வெளியான பிரியங்காவின் அரசியல் நுழைவு பற்றிய அறிவிப்பு, ஆசாத்திற்குக் கூடதெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அறிவிப்பு வந்தவுடன் லக்னோவில் உள்ள உபி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்ட திடீர் சுவரொட்டியில் "Indira is back'’ என்ற வாசகம் பிரியங்காவின் படத்துடன் இருந்தது.

1919 -ல் மோதிலால் நேரு காங்கிரஸில் சேர்ந்து தலைவரானார். சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா பொதுச் செயலாளர்களில் ஒருவராக கட்சிக்குள் நுழைகிறார். மோதிலால் நேரு குடும்பத்திலிருந்து இதுவரை பதினோரு நபர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். மேனகாவும், வருணும் எதிரணிக்குச் சென்றுவிட நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் காங்கிரஸ் அனேகமாக இருந்திருக்கிறது.

எத்தனை முறை பத்திரிகையாளர்கள் கேட்டாலும் அரசியலில் விருப்பமில்லை என்பதையே பதிலாகத் தரும் பிரியங்காவிற்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது அவரது பேச்சில் தென்படுவதுண்டு. இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள் அவரது மனதில் ஒரு பயமும் அரசியலுக்குள் நுழைந்தால் குடும்பத்தினரை இழந்துவிட கூடுமோ என்ற
எண்ணத்தையும் ஏற்படுத்தியிருந்தது நிஜம்.

தாயும் மகளும்
தாயும் மகளும்

"என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பயத்தைக் கொடுத்த அந்த சம்பவம், 2004 ல் என்னுடைய அம்மாவின் (சோனியா காந்தி) அலுவலக அறையில்  கட்சிக்காரர்களும், வேண்டியவர்களும் அவரை சூழ்ந்து கொண்டு நீங்கள் தான் பிரதமராக
வேண்டும் என்ற காட்சி. வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த நான் ஒரு கணம் பயத்தில் உறைந்துவிட்டேன். அழுகையை அடக்க முடியாமல் கதறி அழத் தொடங்கினேன். என்னுடைய சகோதரனை நோக்கி ஓடினேன், என்னுடைய எண்ணெமெல்லாம் என்னுடைய அம்மா சாகப்போகிறார்; அதை நான் உணர்ந்து கொண்டேன் என்பதுதான். மிகவும் நேசிக்கும் ஒருவரை இழந்துவிடுவோம் என்ற பயம். இந்த பயம் இல்லையென்று நான் சொல்லப்போவதில்லை. ஆனால் அதன்பிறகு அது அவருடைய கடமையின் ஒரு பகுதி என்று உணர்ந்தேன். அவருக்கு இப்போதும் ஆபத்துகள் உள்ளன. ராகுலுக்கும் ஆபத்து உள்ளது. அது தெரியும். ஆனால் அவர்களிடம் வெளியே போகாதீர்கள், காருக்குள்ளேயே இருங்கள், இதைச் செய்யாதீர்கள், அதைச் செய்யாதீர்கள் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். இந்த கடமையில் அவர்கள் உயிரை இழந்தால் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்,'' என்று செய்தியாளர் பர்கா தத்திடம் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் ப்ரியங்கா கூறியுள்ளார்.

 தன்னை சார்ந்தோரை அரசியலுக்கு காவு கொடுத்து விடுவோமோ என்ற பயம் அவர் புத்த மதத்தின்பால் ஈர்க்கப்பட்டதற்கும், தியானத்தில் ஈடுபடுவதற்கும் காரணமாக இருக்கலாம்.

பிரியங்காவின் உறுதிக்கு சான்றாக  1999- ல்  நடந்த ஒரு சம்பவத்தை உபியின் காங்கிரஸார் குறிப்பிடுகிறார்கள். 1999 நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி அமேதி மற்றும் பெல்லாரி ஆகிய இரட்டைத் தொகுதிகளில் போட்டியிட்டார். அதுதான் அவரது முதல் அரசியல் நுழைவு. பயத்தால் சோனியா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக பேசப்பட்டது. அதற்கு முன்பு 1998 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமேதி தொகுதியில் தோற்றுப் போனது. 99-ல் அமேதியில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய கட்டாயம். 27 வயதான பிரியங்கா தான் அமேதியில் சோனியாவின் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தினார். பிரசாரத்தின் வியூகத்தை வகுக்கும்போது "நாம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
ஜெயிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து வேலை செய்ய வேண்டும்' என்று பிரியங்கா
சென்னது எட்ட முடியாத உயரமென்பது உள்ளூர் காங்கிரஸாரின் எண்ணமாக இருந்தது. அப்போது மத்தியிலும் உபியிலும் பாஜக ஆட்சி செய்த காலகட்டம். ஆனால் சோனியா 3,00,012 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். அந்த வெற்றி பிரியங்காவுடையது என்கிறார்கள்.

புதுதில்லி கான் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை தானே சென்று வாங்குவது, குழந்தைகளுக்குப் பிரியமான கப் கேக் செய்வது, தியானம் மற்றும் புத்தகங்களில் தனது நேரத்தைக் கரைத்துக் கொண்டு, குழந்தைகளான ரேகன், மிர்யா மற்றும் கணவர், அம்மா, ராகுல் என்று குடும்பத்திற்குள் வளைய வந்த பிரியங்காவை இப்போது முழு நேர அரசியலுக்கு அழைத்து வந்த ‘அந்த சீண்டல்' எதுவென்று தெரியவில்லை.

பிரியங்காவின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள கிழக்கு உபியின் 32 நாடாளுமன்ற தொகுதிகளும் வெல்வதற்கு கடினமான தொகுதிகள். பிரியங்கா தேர்ந்தெடுத்திருப்பது பூக்கள் நிரப்பப்பட்ட பாதையல்ல. ஆனால் பிரியங்காவின் வருகை காங்கிரஸிற்கு தேவையான உற்சாகத்தை தந்திருக்கிறது என்று மட்டும் சொல்ல முடியும்.

பிப்ரவரி, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com